இறந்தவர்களுக்கான சம்பிரதாயப் பிரார்த்தனை (#11276)

* (இறந்தவர்களுக்கான இந்தச் சம்பிரதாய கூட்டுப் பிரார்த்தனையானது பஹாய்களுக்குரிய  ஒரே ஒரு கட்டாயமானக் கூட்டுப் பிரார்த்தனையாகும்; இதை ஒரு நம்பிக்கையாளர் ஒப்புவிக்கும்போது, வந்துள்ள மற்ற அனைவரும் எழுந்து நின்று அமைதிகாக்க வேண்டும். இப்பிரார்த்தனை தொடர்பாக, இறந்தவர் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், இறந்தவர் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக இது வாசிக்கப்பட வேண்டுமென்றும், இது  ஒப்புவிக்கப் படும்போது கிப்ளியை நோக்கி திரும்புவது அவசியமில்லை என்றும் பஹாவுல்லா தெளிவுப் படுத்தியுள்ளார்.  “அல்லா-உ-அப்ஹா” ஒரு முறை வாசிக்கப்பட்டும்; அதன் பின் தொடர்ந்து வரும் ஆறு வரிகளுள் முதலாம் வரி பத்தொன்பது முறை வாசிக்கப்பட வேண்டும். அதன் பின் “அல்லா-உ-அப்ஹா” மீண்டும் ஒரு முறை வாசிக்கப்பட்டு, இரண்டாம் வரி பத்தொன்பது முறை வாசிக்கப்படும்.  இவ்வாறாகவே ஆறு வரிகளும் வாசிக்கப் படவேண்டும்.)

என் இறைவா! இவர் உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உம் ஒருவரிடமல்லாது மற்ற அனைத்தின்பாலுள்ள பற்றுகள் யாவற்றையும் துறந்து, உம்மை நோக்கித் தனது வதனத்தைத் திருப்பியுள்ள உமது ஊழியனும், ஊழியனின் மைந்தனுமாவார். மெய்யாகவே, கருணை காட்டுவோரிடையே கருணை மிக்கவர் நீரே.

மனிதர்களின்  பாவங்களை மன்னித்து அவர்களின் குறைகளை  மறைப்பவரே,  உமது  வள்ளன்மையெனும்  சுவர்க்கத்திற்கும், உமது அருள் என்னும் சமுத்திரத்திற்கும் பொருந்த   அவரை   நடத்துவீராக.   மண்ணுலகையும் விண்ணுலகையும் படைப்பதற்கு முன்பாகவிருந்த  உமது மேலான    கருணையின்   பிரகாசத்தினுள்    அவரைப் பிரவேசிக்க அனுமதிப்பீராக. என்றென்றும் மன்னிப்பவரும் தாராளத் தன்மை மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

பிறகு “அல்லா-உ-அப்ஹா”  எனும் வாழ்த்துரையினை அவர் 6 முறை மீண்டும் மீண்டும் கூறட்டும்; அதன் பின்னர் கீழ்வரும்  வசனங்கள் ஒவ்வொன்றையும் 19 முறை மீண்டும் மீண்டும் கூறட்டும். [குறிப்பைப் பார்க்கவும்]

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனை  வழிபடுகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவன் முன் சிரந் தாழ்த்துகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனிடம் பக்தி கொள்கின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனைப் புகழ்கின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனில் பொறுமையாய் இருக்கின்றோம்.

*(இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவர் இவ்வாறு கூறுவாராக: இவள் உமது பணிப் பெண்ணும் உமது பணிப் பெண்ணின் மகளுமாவாள்...)

-Bahá'u'lláh
-----------------------

